jump to navigation

காணமறந்த கணவுகள் April 21, 2007

Posted by காற்றாடிக்கணவு in நான்.
add a comment

விடியற்காலை பொழுது, அனேகமாக 4:30 மணியிருக்கும்… எல்லோர் வீட்டிலும் விளக்குகள் எரியத்துவங்கிவிட்டிருக்கும்… சுவர் கோழிகள் சத்தமும் சேவல்களின் கூவலும் ஆங்காங்கே கேட்டுக்கொண்டிருக்கும்… சில நிமிடங்களில் நேற்று காலை மூடப்படாத வீட்டுக் குழாய்களிலிருந்து சத்தமாக “சர்சக்-சர்சக்” என்ற சத்தம் வரும், சிறிது நேரத்தில் தண்ணீர் வர ஆரம்பிக்கும்… விடியற்காலை டீ கடைகளில் ஓரிருவரின் குரல் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்…

சமயலறையில் ஏதோ உருட்டும் சத்தம் மெதுவாக கேட்கும்… கீழே ஒதுங்கி கிடக்கும் போர்வையை மெதுவாக என் மேலே இழுத்துவிட்டுவிட்டு செல்வார் அப்பா… மாட்டிலிருந்து பால் பீய்ச்சும் சத்தம் “சர்சர் – சர்சர்” என கேட்கும்… சிறிது நேரத்திற்கெல்லாம் “கொழந்தெ – கொழந்தெ, எழுந்திருப்பா இந்த காஃபிய குடிச்சிட்டு படுத்துக்க” என அம்மா போர்வையை விலக்குவார்… “இப்ப வேணாமா, அப்றமா குடிக்கிறேன்” என மறுபடியும் இழுத்து முகம் வரை மூட மறுபடியும் அன்புத்தொல்லை தொடர, அதை வாங்கி அவசர அவசரமாக குடிக்க…. “பாத்துப்பா நாக்கு சுட்டுடபோது, மெதுவா குடி” என்பதை கேட்டும் கேட்காமலும் குடித்துவிட்டு, மறுபடியும் போர்வையை நன்றாக இழுத்து மூடிக்கொண்டு ஏதோ ஒரு சுகமான உலகத்தில் சஞ்சரித்த்து போல இருக்கும்…

விடியல்பொழுதில் கணவுகளுக்கா பஞ்சம்…!!! வண்ண வண்ண தேவதைகள் கணவில், வானம்பாடிகளின் குரல்களிடையே தூரத்து மரத்திலமர்ந்து போட்டியிட்டு கூவும் குயில்கள்… கீச் கீச் என்ற குரல்கள்…

போர்வையின் ஓட்டைகளில் மஞ்சள் சூரிய வெளிச்சம் ஒருவித வெதுவெதுப்போடு தழுவும்… எழுந்திருக்க மனமில்லாமல் எழுந்து… வேகவேகமாக ஒரு சின்ன டவலையும்  – சோப்பு டப்பாவுடன் கொல்லையிலுள்ள கிணற்றங்கரையினில்… மார்கழி மாதம் சொல்லத்தேவையில்லை, கிணறு நிரம்பி வழியும் அளவிற்கு தண்ணீர் தளும்பிக்கொண்டிருக்கும்… அனேகமாக ஒரே நேரத்தில் பத்து பதினைந்து பேர் அங்கு சேர்ந்துவிட்டிருப்போம்… ஒரே கும்மாளம் தான் எங்களுக்கு… பம்பு செட்டிலிருந்து குட்டிக்கரணம் அடித்து… குரங்கு நீச்சல் அடித்து… இடையில் யார் ரொம்ப நேரம் தண்ணீருக்குள் மூச்சு பிடித்துக்கொண்டு இருப்பது என்று போட்டி வேறு… ஒருத்தன் கரையில் 1,2,3,4,….. மூச்சுவிட்டமல் எண்ணிக்கொண்டிருப்பான்…

தண்ணீருக்குள் விதவிதமான விளையாட்டு… நேரம் போவதே தெரியாமல் கண்கள் சிவந்து போகும் வரை எந்த கவலையும் இல்லாமல் குளித்துக்கொண்டிருந்ததுண்டு… எங்கிருந்தோ திடீரென கிணற்றுக்கு சொந்தக்காரர் விரட்டிக்கொண்டு வருவார்…

காதுக்கருகில் “டிங்-டிங்-டிங்” என்று சத்தம் மெதுவாக வந்து கொண்டிருந்தது… சிறிது நேரத்தில் ரொம்ப சத்தமாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது… நேற்று இரவு மொபைல் போனில் 7:00 மணிக்கு வைத்த அலாரம் மேலும் பலமாக ஒலிக்க ஆரம்பித்தது….  சீக்கிரம் கிளம்பவில்லையெனில் ட்ராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு ஆஃபீஸ்கு நேரத்துக்கு போகமுடியாதே… அவசர அவசரமாக எழுந்து பாத்ரூம் ஓடினேன்… குழாயை திறந்தால் சொட்டு தண்ணீர் கூட வரவில்லை… ஹவுஸ் ஓனர் மறந்து தூங்கிவிட்டாரோ… கீழே இரங்கி போய் மோட்டாரை ஓடவிட்டு, வேகவேகமாக தயாராகிக்கொண்டிருந்தேன்… !!!

நிலாச்சூரியன்… !? October 26, 2006

Posted by காற்றாடிக்கணவு in நான்.
4 comments

ஒரு வேளை நான் கணவு கண்டுகொண்டிருந்தேனா தெரியவில்லை… முற்றிலும் இருட்டு, கரகரவென ஏதோ சத்தம்… என்னவோ எங்கோ ஊளையிடும் சத்தம்… தவளைகளின் டர்டர் என சத்தம்… கருப்பு ஒவியங்களின் அசைவுகள்… சின்ன சின்னதாய் மின்னும் வின்மீன்கள்… தொலைவில் சின்னதாய் வண்டியின் ஒலிபெருக்கியின் சப்தம்…

திடீரென காலில் சில்லென்ற உணர்வு… உற்றுப்பார்த்தால் கீழே தண்ணீர்… அப்போதுதான் தெரிந்தது நான் ஆற்றுக்குள் நடந்துகொண்டிருக்கிறேன் என்று… கையில் உள்ள கைவிளக்கை ஒளிர்வித்தேன்… பளீரென வெளிச்சம்… அப்பப்பா… என்னமோ வெள்ளி பாதுகைகள் கொட்டி வைத்ததுபோல சின்னஞ்சிறு கெண்டை மீன்கள் தண்ணீரில் துள்ளிக் கொண்டிருந்தன… அவைகள் தூங்கவில்லை போலும்… அவை எப்போது தூங்கும் என்ற கேள்வி எனக்குள்…

மேலும் நடந்தேன்… தண்ணீரில் நனைந்த மணல் சர் சர் என்ற ஒசையை என் காலடியில் எழுப்பிக் கொண்டிருந்தன… எனக்கே பயமாகத்தான் இருந்தது அந்த ஓசை… என்னமோ ஒரு அசட்டு தைரியத்துடன் நடந்து கொண்டிருந்தேன், சில்லென்ற சலனத்துடன் செல்லும் தண்ணீரினுள் இறங்கிவிட்டேன்… அரை பாகமுள்ள நிலவு தண்ணீரில் அலைந்தது வேகமாக… மேகத்தின் மூடல்களால் அதனால் சரியான வெளிச்சத்தை தர முடியவில்லை என்று மேலே பார்த்த போது தெரிந்து கொண்டேன்…

ஏதோ ஒரு கொக்கு வேகமாக பறந்து சென்று பக்கதில் உள்ள சவுக்கு தோப்பிற்குள் மறைந்தது… அடித்தொண்டையினுள் ஒரு பயம்… முருகா முருகா என வேண்டுதல் வேறு… 

“யார்ராது இந்த நேரத்துல, எங்க போற” என்ற குரலோடு என் முகத்தில் கைவிளக்கை அடித்தார் பால்கார முத்து அண்ணன்… என் முகத்தை பார்த்த்தும், “ஏண்டா கண்ணா அப்பாட்ட சொல்லி ஒரு சைக்கிள் வாங்கி தர சொல்ல கூடாதா… தெனம் இப்படி நாலு மைல் வெடிகாத்தால நடந்து போய் அப்புறம் எப்படி ட்யூஷன் படிப்ப…!??” என்று சொல்லிக்கொண்டே ஊருக்குள் சைக்கிளை விரட்டினார்…

“எங்க ஊர்லருந்து சிலருக்கு ஸ்கூல் போகவே வழி இல்ல… ஏதோ நான் குடுத்து வச்ச பையன்றதால எங்கப்பா என்ன ட்யூஷன் படிக்க சேத்துவிட்டிருக்கிறார்… சைக்கிள் வேணும்னு கேட்டு இதையும் கெடுத்துக்க சொல்றீங்களா…” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டது அவருக்கு கேட்டிருக்க ஞாயம் இல்லை…

கொஞ்சமாக கிழக்கு வெளுக்க ஆரம்பித்தது… எனது நடை வேகப்படுத்தினேன் 6 மணிக்கெல்லாம் போகலனா யாரு வாத்தியார்ட்ட திட்டு வாங்குறது என்று 4:30 மணிக்கு எழுந்து 5 மணிக்கெல்லாம் பக்கத்து ஊரில் உள்ள என் பள்ளிக்கு கிளம்பிவிட்டிருந்தேன்… சற்றைக்கெல்லாம் சூரியன் தலை தூக்க ஆரம்பித்துவிட்டான்…

அட இது என்ன இந்த பக்கம் சூரியன் இருக்கு… அந்த பக்கம் நிலா இருக்கு…???!!! சரியாக இது இரவா ? பகலா ? என்ற யோசனை… சின்ன சந்தேகம்…? அந்த சந்தேகம் இன்று வரை தீரவில்லை அது வேறு விஷயம்… அந்த நிலாவும் சூரியனும் ஒரே நேரத்தில் தெரியும் ஏராளமான தருணங்களை… நான் கடந்த அந்த இனிமையான தனிமை வேளைகளை இப்போது நினைத்து பார்க்கும் போது அடடா, திரும்பவும் 6 ம் வகுப்பு படிக்க ஆசையாக இருக்கிறது…

நிலாச்சூரியனை அன்று ரசிக்கவில்லை நேரில், இன்று ரசிக்கிறேன் Desk top photo ல் பார்த்து…